Friday, August 7, 2015

Kavidanjali கவிதாஞ்சலி

கனவு நாயகர் A.P.J.அப்துல் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி

உலகெங்கும் தமிழோடு உலவிய உத்தமரே,
மதிவாளரே, மனுக்குல மன்னரே,
இருபது இருபதின் இந்தியப்பேரரசரே,
இனி யாருக்கு நாங்கள் முடிசூட்டுவோம்.

உலக இளைஞர்களின் நேசரே,
வயோதிகம் வராத இளைஞரே,
ஓய்வுக்கே ஓய்வு தந்த உழைப்பாளரே,
இளைப்பாற எங்கே சென்றுவிட்டீர்.

கருத்துக்கருவூலமே, சன்மார்க்க சித்தரே,
இறுதிவரை அறவுரை தந்த முகவரியே,
இளைய பட்டாளத்தின் இராணித்தேனியே,
நண்பர்களை மட்டும் கொண்ட தளபதியே.

அணுவல்லமையை அறியச்செய்தோரே,
நிலவுக்கும் செவ்வாய்க்கும் நீந்திச்சென்றவரே
பத்தாம் கோளையும் பார்த்து விட்டு
பால்வெளிக்கு பறந்து சென்றீரோ.

அன்பால் அடிமையாக்கிய அதிபதியே
ஈகை நிறைந்தோரே, உயிர்ப்பிச்சை தந்தவரே
கனவை காணச்சொன்னீரே, ஆனால்
உன் இறுதிக்கனவை குழிதோண்டி புதைத்தாரே.

என்றும் உன் நினைவுடன்

கவிதாசன் அப்துல்சமது
http://centamil.blogspot.in/